Tuesday, August 29, 2006

திவ்ய தேச தரிசனம் 1 - திருக்கோழி (உறையூர்)

மஹாவிஷ்ணுவுக்கு உலகெங்கும் பல கோயில்கள் இருந்தாலும், திராவிட வேதம் என்றழைக்கப்படுகிற, பக்தி ரஸம் சொட்டும் ஆழ்வார் பாசுரங்களின் தொகுப்பான, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆழ்வார்களால் பாடப் பெற்ற (மங்களா சாசனம் செய்யப்பட்ட) திவ்ய தேசங்கள் எனப்படும் திருக்கோயில்கள் மொத்தம் 108 ஆகும். இவற்றில் 105 கோயில்கள், இந்திய துணைக்கண்டத்திலும், 1 (சாளக்கிராமம்) நேபாளத்திலும் உள்ளன. மற்ற இரண்டும் விஷ்ணுவின் விண்ணுலக உறைவிடங்களாக உருவகப்படுத்தப்பட்ட பரமபதமும் (வைகுந்தம்), திருப்பாற்கடலும் என்பது வைணவர்களின் நம்பிக்கை.

இவை வைணவத் திருப்பதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பூவுலகில் உள்ள 106 புனிதத்தலங்களில், 40 முந்தைய சோழ நாட்டிலும், 2 நடு நாட்டிலும் (கடலூர் அருகில்), 22 தொண்டை நாட்டிலும், 11 வட நாட்டிலும் (ஆந்திரா, உ.பி, குஜராத், நேபாளம்), 13 மலை நாட்டிலும் (கேரளம்), 18 பாண்டி நாட்டிலும் அமைந்துள்ளன. திவ்ய தேசங்கள் சிலவற்றில்(60) நின்ற திருக்கோலத்தோடும், சிலவற்றில்(27) கிடந்த திருக்கோலத்தோடும், சிலவற்றில்(21) வீற்றிருந்த திருக்கோலத்தோடும் மஹாவிஷ்ணு காட்சி தருகிறார்.

ஆழ்வார் என்ற சொல் 'இறையனுபவத்தில் திளைப்பவர்' என்பதை குறிக்கும். வைணவத்தில் பன்னிருவர், ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 5 முதல் 9-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இவர்கள் தென்னிந்தியாவின் பல இடங்களுக்கு தொடர்ந்து பயணித்தும், இறையன்பைத் தேக்கிய மிக அழகான, தத்துவார்த்தமான பாசுரங்களை இயற்றியும், பக்தி மார்கத்தை செம்மைபடுத்தி, மதச்சூழல் புதுப்பொலிவு பெறுவதற்கு காரணமாயினர் என்றால் அது மிகையில்லை. மிக முக்கியமாக, ஆழ்வார் பாசுரங்களில் சொல்லப்பட்டவை சாதி, இன வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டவை, வைகுந்தன் மேல் ஒருவித அதிதீவிர அன்பையும் பூரண சரணாகதி தத்துவத்தையும் பறைசாற்றுபவை ! ஆழ்ந்த உணர்வுபூர்வமான இறையன்பை மட்டுமே முன் நிறுத்திய புது மதப்பாரம்பரியத்தை நிறுவியதில் ஆழ்வார்களே தலையானவர்கள் எனலாம். பல காலகட்டங்களில் வாழ்ந்த ஆழ்வார்களின் பாடல்களை தேடி எடுத்து அதை நாலாயிர திவ்யப்பிரபந்தம் என்ற தொகுப்பாக்கி, இசைப்படுத்திய பெருமை நாதமுனி என்ற பெருமகனாரைச் சாரும். இதற்காக, தன் வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்டவர் அவர் !

சோழ நாட்டில் அமைந்துள்ள வைணவ திவ்ய தேசங்களை குறித்து ஒரு தொடர் எழுதலாம் என்று எண்ணம். தொடரின் முதல் பதிவு இது. முதன்மையான திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். தேசிகனும் பல சமயங்களில் ஸ்ரீரங்கம் குறித்து தன் வலைப்பதிவில் எழுதியிருக்கிறார். எனவே, திருக்கோழி என்ற திருவுறையூர் கோயில் பற்றிய பதிவோடு இத்தொடரை ஆரம்பிக்கிறேன்.


*****************************
இக்கோயில், திருச்சியிலிருந்து மூன்று கிமீ தொலைவில் உள்ளது. இத்தலம், நிஷ¤லபுரி, ஊர்சடை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் நாயகர் அழகிய மணவாளன் எனப்படுகிறார், நின்ற திருக்கோலத்தில், கைகளில் சங்கு/ பிரயோக சக்கரம் தாங்கி அருள் பாலிக்கிறார். வீற்றிருந்த திருக்கோலத்தில் உள்ள தாயார், கமலவல்லி நாச்சியார் மற்றும் வாசவல்லி என்று அறியப்படுகிறார். திருமங்கையாழ்வாரும் (பாசுரம் 1762), குலசேகர ஆழ்வாரும் (பாசுரம் 662) இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். இங்குள்ள விமானமும், தீர்த்தமும் (குளம்) கல்யாண விமானம் மற்றும் கல்யாண தீர்த்தம் எனப்படுகின்றன. திருப்பாணாழ்வார் இங்கு தான் அவதரித்தார். அரங்கனை தரிசித்த திவ்ய அனுபவம் தந்த பேருவகையில், அவர் திருவாய் மலர்ந்தருளிய 'அமலனாதி பிரான்' பாசுரங்களுக்கு ஈடு இணை கிடையாது !
*****************************

அமலனாதிபிரானில் வரும் 3 அற்புதமான பாசுரங்களை கீழே தந்திருக்கிறேன். அரங்கனின் பேரெழில் அவர் உள்ளத்தை நிறைத்ததையும், அரங்கன் அவருள் புகுந்து அவரை ஆட்கொண்டதையும், அமுதை ஒத்த அரங்கனைக் கண்டபின் வேறெதையும் காணும் ஆசை அவரை விட்டு அகன்று விட்டதையும் ஆனந்தப் பெருக்கோடு சொல்லியிருக்கிறார்!

931@
பாரமாய* பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-

வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*

கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-

வார மார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே.

பதவுரை:
என்னுடைய முற்பிறவியின் பந்தங்களை நீக்கி, என்னை ஏற்றுக்கொண்டதோடு, என்னையும் ஆட்கொண்டவனும் ஆகிய திருவரங்கத்தில் வாழும் எம்பெருமானே! உன் திருமார்பில் அடியவனை சேர்த்துக் கொண்டதற்கு, என்ன பெருந்தவம் செய்தேன் என்று நான் அறியேன்!

935@..
ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*

ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*

கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*

நீல மேனி ஐயோ. * நிறை கொண்டது என் நெஞ்சினையே.


பதவுரை:
ஆலிலைக் கண்ணனாய், சிறுவனாய், ஏழு உலகங்களையும் விழுங்கியவனும், சர்ப்பத்தில் பள்ளி கொண்டிருப்பவனும் பெரிய மணிகளால் ஆன ஆரமும், முத்து மாலையும் தன் நீலமேனியில் அணிந்தவனும் ஆகிய அரங்கநாதனின் ஒப்பற்ற/முடிவற்ற பேரழகு என் உள்ளத்தை முழுதும் வசப்படுத்தி விட்டதே!

936@..
கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-

உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*

அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-

கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே.


பதவுரை:
கொண்டல் பூக்களின் நிறத்தை உடையவனும், ஆயர்பாடியில் வெண்ணெயை திருடி உண்டவனும், அண்டசராசரத்திற்கு அதிபதியும் ஆன அமுதத்தை ஒத்த அரங்கநாதனை தரிசித்த எனது கண்கள் வேறெதையும் காண விரும்பாதே!


***************************
இக்கோயிலின் (திருக்கோழி அல்லது மூக்கேஸ்வரம்) பெயர்க் காரணம் , ஒரு தைரியமான கோழி வலிமை பொருந்திய ஒரு யானையை தன் அலகால் கொத்தி விரட்டியடித்ததாகக் கூறப்படும் ஒரு பழங்கதையுடன் தொடர்புடையது. உறையூர் பண்டைய சோழர் தலைநகரமாக விளங்கியது. இக்கோயிலை கட்டியவர் நந்த சோழன் என்றும், அரசனின் மகளாக அவதரித்த மஹாலஷ்மி ரங்கநாதரை மணந்ததாகவும், அந்த வைபவத்தை கொண்டாடும் விதமாக அரசன் இக்கோயிலை கட்டியதாகவும் தலபுராணம் கூறுகிறது. கோயிலுள் நுழைந்தவுடன் காணப்படும் பெரிய மண்டபத்து தூண்களில் மிக அற்புதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆழ்வார்களுக்கும், வைணவ ஆச்சார்யர்களுக்கும் சன்னதிகள் உள்ளன. திருப்பாணாழ்வாருக்கு, தனியாக ஒரு சன்னதி திருக்குளத்தின் வடப்புறம் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான வாயில் வடக்கு (ஸ்ரீரங்கம்) நோக்கியுள்ளது.


பங்குனி மாத உத்சவத்தின் போது, ஸ்ரீரங்கத்திலிருந்து உத்சவ மூர்த்தியான நம்பெருமாள் (உறையூரில் மூலவர் மட்டுமே இருக்கிறார்) ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பங்குனி பூரத்தின் போது, கல்யாண உத்சவ வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது. திருப்பாணாழ்வார் உத்சவம் கார்த்திகையில் நடைபெறுகிறது.

****************************

என்றென்றும் அன்புடன்
பாலா

26 மறுமொழிகள்:

குமரன் (Kumaran) said...

Taken Printout. Will come back shortly after reading it.

Feeling happy. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

உறையூர் தலம் பற்றி நன்கு விளக்கி உள்ளீர்கள் பாலா!
திருப்பாணாழ்வார் அவதாரத் தலம் என்பது பலர் அறிந்திராத ஒன்று!
நீங்கள் சொன்னது பலருக்கு பயன் உள்ளதாய் இருக்கும்.

பத்தே பாசுரங்கள் தான் பாடியுள்ளார். ஆனால் சாதியின் காரணாமாய் இறைவனுக்கு மிக அருகில் இருக்க முடியாததாலோ என்னவோ, "ஐயோ" என்று உருகி உருகி பாடியுள்ளார்.
பின்னர் அரங்கன் அவரைக் கோவில் அந்தணரின் தோள் மீது அமர வைத்து தன் சன்னிதிக்கு கொணர்ந்தது தனிக்கதை!
இன்றளவும் பதினோரு ஆழ்வார்களில் (ஆண்டாளைத் தவிர்த்து), இவருக்குத் தான் அதிக ஆபரணம், மாலைகள், அலங்காரம் செய்யப்படுகிறது.

உறையூர் கோட்டை பற்றி பொன்னியின் செல்வனில் பல குறிப்புகள் வரும் அல்லவா? ஒரு கால கட்டத்தில் சோழர்களின் தலைநகரமும் கூட!

துளசி கோபால் said...

அருமையான பதிவுக்கு நன்றி பாலா.

இந்த முறைதான் ச்சென்னையிலெ இருந்து 108 திவ்யதேஸம்
விசிடி வாங்கி வந்தேன்.

பெருமாளொட அனுக்கிரஹத்தால் எல்லாம் நல்லபடி நடக்கும்.

படங்களும், சம்பவங்களும், விவரமும் பிடிச்சிருக்கு.

enRenRum-anbudan.BALA said...

Kumaran,
I am happy to have made you feel happy :)

***********************
கண்ணபிரான்,
வாசித்ததற்கும், கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் நன்றி.

//பத்தே பாசுரங்கள் தான் பாடியுள்ளார். ஆனால் சாதியின் காரணாமாய் இறைவனுக்கு மிக அருகில் இருக்க முடியாததாலோ என்னவோ, "ஐயோ" என்று உருகி உருகி பாடியுள்ளார்.
பின்னர் அரங்கன் அவரைக் கோவில் அந்தணரின் தோள் மீது அமர வைத்து தன் சன்னிதிக்கு கொணர்ந்தது தனிக்கதை!
//
அமலனாதிபிரான் பாடல்களில் பக்திப் பேருவகையை (Ecstasy through Devotion) காணலாம் ! நீங்கள் குறிப்பிட்ட 'அந்தணர் தோள் மீதேறி அரங்கனை தரிசிக்க பாணர் வந்தது' பற்றியும் வாசித்திருக்கிறேன்.
திருப்பாணாழ்வார் பற்றி தனிப்பதிவு ஒன்று எழுதலாம் என்றுஎண்ணமுண்டு. 'சோழன்' என்றாலே எனக்கு நடிகர்
திலகம் (ராஜராஜ சோழன்) தான் நினைவுக்கு வருவார் :)

**********************
துளசி,
வாசித்ததற்கும், கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் நன்றி. திவ்ய தேசம் CD பார்த்து விட்டீர்களா?

//பெருமாளொட அனுக்கிரஹத்தால் எல்லாம் நல்லபடி நடக்கும்.
//
நிச்சயம் நம் எல்லாருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பது தான் என் பிரார்த்தனையும்.

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

நல்ல பதிவு பாலா.
இந்த கோயிலுக்கு போன முறை சென்ற போது, உடையவரை ( ராமானுஜர் ) பல்லக்கில் ஏற்றினார்கள். முன் பக்கம் ஒரு ஆள் தேவை பட்டது, உடனே அங்கிருப்பவர் என்னை கூப்பிட்டார். நான் முன் பக்கம் பல்லாக்கை சுமந்து சென்றேன். சுமந்து சென்ற நான்கு பேரில் நான் மட்டும் தான் ஜீன்ஸ் அனிந்தவன் :-). என் பாட்டி, அப்பாவிற்கு இந்த கோயில் மீது மிகுந்த ஈடுபாடு.

enRenRum-anbudan.BALA said...

அன்பில் தேசிகன்,

//இந்த கோயிலுக்கு போன முறை சென்ற போது, உடையவரை ( ராமானுஜர் ) பல்லக்கில் ஏற்றினார்கள். முன் பக்கம் ஒரு ஆள் தேவை பட்டது, உடனே அங்கிருப்பவர் என்னை கூப்பிட்டார். நான் முன் பக்கம் பல்லாக்கை சுமந்து சென்றேன். சுமந்து சென்ற நான்கு பேரில் நான் மட்டும் தான் ஜீன்ஸ் அனிந்தவன் :-).
//
கோயிலுக்குக் கூட வேட்டி அணியாமல் அது என்ன பழக்கம் :))

இருந்தாலும், உடையவரைச் சுமந்து வைணவப் பெருந்தகை ஆகி விட்ட உங்களை கேலி செய்தல் முறையாகாது.

நீங்கள் அடியார்க்கு அடியார் !
எ.அ.பாலா

said...

//அன்பில் தேசிகன்// அன்பில் என்று ஒரு திவ்விய தேசம் இருக்கிறது :-)

enRenRum-anbudan.BALA said...

Desikan,
You are really SHARP :) It is also near Trichy, I know !

ENNAR said...

தாங்கள் சொல்வது நாச்சாரம்மன் கோயிலா?

Sudhakar Kasturi said...

பாலா,
மிக நல்ல பதிவு. எளிமையாக இனிமையாக எழுதியிருக்கிறது.
108 குறித்தும் எழுதுங்கள். கொஞ்சம் என்போன்ற ஆட்களுக்கும் உதவியாக இருக்கும்.
எனக்கு நாலாயிரத்தில் ஈடுபாடு உண்டு. அமலனாதிபிரான் பாசுரம் குறித்து வேளுக்குடி கிருஷ்ணன் தந்த விளக்க குறுந்தகடும், அமலனாதிபிரான் வியாக்கியானமும் ( ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ வெளியீடு) கொண்டு புரிந்துகொள்ளவும் அனுபவிக்கவும் தலைப்பட்டுள்ளேன். தங்கள் விளக்கம் அருமை! ஒவ்வொரு தலத்திற்கும் ஆழ்வார்கள் அருளிய பாடல்களில் சிலவற்றை இப்படி வழங்குவது மிகவும் அவசியமும் கூட.

"அகஸ்த்யமும் அநாதியன்றோ?" என ஆச்சார்ய ஹ்ருதயம் தமிழைக் கொண்டாடுவது பலருக்கும் புரியவேண்டும். பாசுரங்களின் ஆழம் அனுபவிக்க தமிழ் அறிவு கண்டிப்பாகத் தேவையென்பது வளரும் தலைமுறைக்கு அறிவிக்கவும், தமிழ் கற்றுக்கொடுக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.

தேவாரமும், திருவாசகமும் , திவ்யப்ரபந்தமும் படித்தெடுக்க இந்த ஜென்மம் போறாது.
அன்புடன்
க.சுதாகர்

ஜெயஸ்ரீ said...

நல்ல தொடர். திருப்பாணாழ்வார் அவதரித்த தலம் என்பதை நான் இதுவரை அறிந்ததில்லை.

//அரங்கனை தரிசித்த திவ்ய அனுபவம் தந்த பேருவகையில், அவர் திருவாய் மலர்ந்தருளிய 'அமலனாதி பிரான்' பாசுரங்களுக்கு ஈடு இணை கிடையாது //

உண்மை, உண்மை.

"செய்யவாய் ஐயோ என் சிந்தை கவர்ந்ததுவே"

"பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தவையே"

எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாத தேனமுத வரிகள்.

enRenRum-anbudan.BALA said...

சுதாகர்,
கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் நன்றி.
//108 குறித்தும் எழுதுங்கள். கொஞ்சம் என்போன்ற ஆட்களுக்கும் உதவியாக இருக்கும்.

//
முயற்சிக்கிறேன்.
//பாசுரங்களின் ஆழம் அனுபவிக்க தமிழ் அறிவு கண்டிப்பாகத் தேவையென்பது வளரும் தலைமுறைக்கு அறிவிக்கவும், தமிழ் கற்றுக்கொடுக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.

//
நிச்சயமாக !

ஜெயஸ்ரீ,
'பல்லவியும் சரணமும்' இல்லாத ஒரு பதிவுக்கு பின்னூட்டமிட்டு இருக்கிறீர்கள் :)
//"செய்யவாய் ஐயோ என் சிந்தை கவர்ந்ததுவே"

"பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தவையே"

எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாத தேனமுத வரிகள்.
//
வாசிக்கும்போது, சுகானுபவம் தரும் வரிகளைக் கொண்டது அமலனாதிபிரான் !

என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

ENNAR,
//தாங்கள் சொல்வது நாச்சாரம்மன் கோயிலா?
//
எந்தக் கோயிலை குறிப்பிடுகிறீர்கள் ? 'அன்பில்' ஒரு வைணவத் தலம். அந்த ஊர் 'நாச்சாரம்மன் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறதா என்று தெரியவில்லை !
எ.அ.பாலா

குமரன் (Kumaran) said...

//உறைவிடங்களாக உருவகப்படுத்தப்பட்ட //

பாலா. ஒரு நம்பிக்கையாளர் சொல்வதா இது? :-)

//பரமபதமும் (வைகுந்தம்), திருப்பாற்கடலும் //

இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளையும் இனிமேல் வரப்போகும் பதிவுகளில் சொல்வீர்கள் என்று நினைக்கிறேன்.

வழக்கமாக திருவரங்கத்தில் இருந்து தானே தொடங்குவார்கள். நீங்கள் திருக்கோழியில் இருந்து தொடங்கியிருக்கிறீர்கள். ஏன்? மற்றவர்கள் திருவரங்கத்தைப் பற்றி எழுதிவிட்டார்கள் என்பது மட்டுமே காரணமா?

நிறைய செய்திகளைத் தந்திருக்கிறீர்கள் பாலா. மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

பிரயோகச் சக்கரத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாகச் சொல்லுங்கள். பெருமாளின் படமும் இருப்பதால் சொல்லி விளக்குவது எளிதாக இருக்கும். திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் இருவரும் இந்த திவ்ய தேசத்தில் மங்களாசாசனம் செய்த பாசுரங்களையும் சொல்லுங்கள்.

அமலனாதிபிரானும் கண்ணிநுண்சிறுத்தாம்பும் மிக மிக அற்புதமானவை. ஆனால் திருப்பாவையும் திருப்பல்லாண்டும் பொது மக்கள் நடுவில் அடைந்திருக்கும் பிரபலத்தை இவை அடையவில்லை. வைணவ சம்ப்ரதாயத்தவர் மட்டுமே இவற்றின் பெருமையை அறிந்திருக்கின்றனர். திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரானில் இருந்து சில பாசுரங்களை இட்டதற்கு மிக்க நன்றி பாலா.

enRenRum-anbudan.BALA said...

குமரன்,
கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் நன்றி.
//இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளையும் இனிமேல் வரப்போகும் பதிவுகளில் சொல்வீர்கள் என்று நினைக்கிறேன்.
//
//திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் இருவரும் இந்த திவ்ய தேசத்தில் மங்களாசாசனம் செய்த பாசுரங்களையும் சொல்லுங்கள்.
//
நிச்சயம் கூறுகிறேன்.

//அமலனாதிபிரானும் கண்ணிநுண்சிறுத்தாம்பும் மிக மிக அற்புதமானவை. ஆனால் திருப்பாவையும் திருப்பல்லாண்டும் பொது மக்கள் நடுவில் அடைந்திருக்கும் பிரபலத்தை இவை அடையவில்லை
//
பெருமாளின் மேல் அவர்களுக்கிருந்த, கடலையொத்த பேரன்பையும், பக்திப் பேருவகையும் பறைசாற்றுபவை
அமலனாதிபிரானும், கண்ணிநுண்சிறுத்தாம்பும் !!!

எ.அ. பாலா

enRenRum-anbudan.BALA said...

குமரன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, திருக்கோழி குறித்த பாசுரங்கள்:

பெருமாள் திருமொழியில் குலசேகர ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது கீழே !

662@
பொய்சிலைக் குரலேற்று ஒருத்தமிறுத்து* போரர வீர்த்தகோன்*
செய்சிலைச்சுடர் சூழொளித்* திண்ணமாமதிள் தென்னரங்கனாம்*
மெய்சிலைக் கரு மேகமொன்று* தம் நெஞ்சில் நின்று திகழப்போய்*
மெய்சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து* என்மனம் மெய் சிலிர்க்குமே 2.5


பெரிய திருமொழி 9-ஆம் பத்து, இரண்டாம் திருமொழியில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது கீழே !

1762@
கோழியும் கூடலும் கோயில் கொண்ட* கோவலரே ஒப்பர் குன்றமன்ன,*
பாழியும் தோளும் ஓர் நான்கு உடையர்* பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்* மாகடல் போன்றுளர் கையில்வெய்ய,*
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி* அச்சோ ஒருவர் அழகியவா. 9.2.5

ச.சங்கர் said...

பாலா
ரொம்ப நாளுக்கு பிறகு வலைக்கழிவுகளுக்கிடையில் ஒரு நல்ல பதிவு....வாழ்த்துக்கள்

குமரன் (Kumaran) said...

பாசுரங்களைத் தந்ததற்கு நன்றி பாலா. நான் ஒரு வாழைப்பழச் சோம்பேறி. யாராவது இப்படித் தமிழ்ப்பாடல்களை இட்டால் விளக்கமும் சொல்லுங்கள் என்று கேட்பேன். விளக்கம் சொல்கிறீர்களா? :-)

திருமங்கையாழ்வார் பாசுரத்தில் 'கோழியும் கூடலும்' என்று சொல்லி உறையூரையும் எங்கள் ஊரையும் தெளிவாகச் சொல்லிவிட்டார். அதனால் இது உறையூர் பாசுரம் என்று தெரிகிறது. ஆனால் குலசேகராழ்வாரின் பாசுரத்தில் அப்படி எந்தக் குறிப்பும் இருப்பதாகத் தெரியவில்லையே?

enRenRum-anbudan.BALA said...

குமரன்,
//ஆனால் குலசேகராழ்வாரின் பாசுரத்தில் அப்படி எந்தக் குறிப்பும் இருப்பதாகத் தெரியவில்லையே?
//

மன்னிக்கவும், குலசேகர ஆழ்வாரின் தவறான ஒரு பாடலை சுட்டி விட்டென்.

பெருமாள் திருமொழியில் குலசேகர ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சரியான பாசுரம் கீழே !

667@..
அல்லிமாமலர் மங்கைநாதன்* அரங்கன்மெய் அடியார்கள்தம்*
எல்லையில் அடிமைத் திறத்தினில்* என்றும் மேவு மனத்தனாம்*
கொல்லிகாவலன் கூடல்நாயகன்* கோழிக்கோன் குலசேகரன்*
சொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர்* தொண்டர் தொண்டர்கள் ஆவரே (2) 2.10

இந்த எளிமையான பாடலுக்கு பொருள் விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன் !


பெரிய திருமொழி 9-ஆம் பத்து, இரண்டாம் திருமொழியில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது கீழே !

1762@
கோழியும் கூடலும் கோயில் கொண்ட* கோவலரே ஒப்பர் குன்றமன்ன,*
பாழியும் தோளும் ஓர் நான்கு உடையர்* பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்* மாகடல் போன்றுளர் கையில்வெய்ய,*
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி* அச்சோ ஒருவர் அழகியவா. 9.2.5

பதவுரை:
திருவறையூரையும் திருக்கூடலூரையும் தன் வீடாகக் கோயில் கொண்டவனான இவன் ஒப்பிலாத மன்னவன் ! குவிந்த, அழகிய குன்றுகளை ஒத்த அழகிய தோள்கள் நான்கை உடையவன் ! இதற்கு முன் நாம் இவனைக் கண்டறியாமல் விட்டு விட்டோ ம் !

இவன் பல நூறு ஆண்டுகள் இங்கு நீடுழி வாழ்கவே ! இவனது பேரெழிலை எண்ணுங்கால், இவன் நீலவண்ண ஆழ்கடலுக்கு
நிகரானவன் என்பதும் இவன் தன் திருக்கைகளில் சங்கு சக்கரத்தை ஏந்தி நிற்பதும் புலப்பட, அச்சோ, இவன் ஒருவனே நிகரில்லா அழகுடையான் !!!


என்றென்றும் அன்புடன்
பாலா

குமரன் (Kumaran) said...

பொருள் உரைத்ததற்கு மிக்க நன்றி பாலா.

கூடல் என்பது இங்கே மதுரையைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் தான் எங்கள் ஊர் என்று மேலே சொன்னேன்.

கொல்லி காவலன் - சேர நாட்டிற்கு அரசன்
கூடல் நாயகன் - பாண்டிய நாட்டிற்குத் தலைவன்
கோழிக்கோன் - சோழ நாட்டிற்கு அரசன்

enRenRum-anbudan.BALA said...

குமரன்,

//கூடல் என்பது இங்கே மதுரையைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் தான் எங்கள் ஊர் என்று மேலே
சொன்னேன்.
//
தாங்கள் கூறுவது சரியே !! நான் தான் திருக்கூடல் என்பதை திருக்கூடலூர் என்று எழுதி விட்டேன், மன்னிக்கவும். நீங்கள்
என்ன, குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் நக்கீரன் வழி வந்தவரோ :))

கொஞ்சம் மேல் விவரம்:

திருக்கூடல்: மதுரையில் உள்ள திவ்ய தேசம். மூலவர் கூடலழகர் என்றும், தாயார் மதுரவல்லி / வரகுணவல்லி என்றும்
அறியப்படுகிறார்.

திருக்கூடலூர்: தஞ்சாவூரிலிருந்து 12 கிமீ தொலைவில் கும்பகோணம் செல்லும் பாதையில் அமைந்துள்ள திவ்ய தேசம். இங்கு
குடி கொண்டிருப்பவர், வையம் காத்த பெருமாள் (ஜகத்ரட்சகன்), தாயார் பத்மாசினி / புஷ்பவல்லி. இப்போது இருக்கும்
கோயில் ராணி மங்கம்மாவால் கட்டப்பட்டது.

//கொல்லி காவலன் - சேர நாட்டிற்கு அரசன்
கூடல் நாயகன் - பாண்டிய நாட்டிற்குத் தலைவன்
கோழிக்கோன் - சோழ நாட்டிற்கு அரசன்
//

மிகச் சரி !

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

நல்ல பதிவு, வாழ்த்துக்கள்

குமரன் (Kumaran) said...

//நீங்கள்
என்ன, குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் நக்கீரன் வழி வந்தவரோ :))
//

:-))

அப்படி பழகிவிட்டது பாலா. தொட்டில் பழக்கம். என்ன செய்வது சொல்லுங்கள்? வேலை செய்யும் இடத்திலும் அப்படித் தான் பெயர் - குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவன் என்று - என்ன குற்றம் யார் மேல சொல்றேனோ அவங்க என்னோட சண்டைக்கு வராத மாதிரி சொல்லத் தெரிஞ்சிருக்கு. அதனால தப்பிச்சேன். வலைப்பதிவுகள்ல மட்டும் இன்னும் அது சரியா செய்யத் தெரியலை. அதனால சில பேர் திட்டுறாங்க. :-)

நக்கீரரும் எங்கள் ஊர் தானே. அதான். :-)

enRenRum-anbudan.BALA said...

//பாலா
ரொம்ப நாளுக்கு பிறகு வலைக்கழிவுகளுக்கிடையில் ஒரு நல்ல பதிவு....வாழ்த்துக்கள்
//
Thanks, Sankar :)

Kumaran,
//வலைப்பதிவுகள்ல மட்டும் இன்னும் அது சரியா செய்யத் தெரியலை. அதனால சில பேர் திட்டுறாங்க. :-)
//
Here, People are far smarter ;-)

Dr.N.Kannan said...

திவ்யதேசம் பற்றி இன்னொரு தொடரா? தேசிகன் மிக அருமையாக செய்து கொண்டு வருகிறார். அதற்கும் தோது வரும்போது இணைப்புக் கொடுங்கள்.

நாலாயிரத்திலும் நான் தேடும் விஷயம் கம்போஜி என்றழைக்கப்பட்ட கம்போடியாவில் நிர்மாணிக்கப்பட்ட அங்கோர்வாட் பற்றிய மங்களாசாசனம் ஏதாவது உண்டா? ஆழ்வார்களுக்கு நிச்சயம் அறிமுகமாகியிருக்க வேண்டும். பல்லவ என்ற சொல் உள்ள கல்வெட்டு ஒன்றை என் திசைகள் கட்டுரையில் காணலாம்.

கண்ணபிரானுக்கு: அச்சோ! ஐயோ! போன்ற பிரயோகங்கள் நாலாயிரம் முழுவதும் பலராலும் பயன்படுத்தப்பட்ட சொல்லாட்சி. வார்த்தைக்கு மீறிய வருணனையைச் சுட்டும் சொல். திருப்பாணாழ்வார் 'தன்னிரக்கத்தில்' சொன்னதாக அது அமைய வாய்ப்பில்லை.

'கொண்டல்' என்பது கீழத்திசையில் தோன்றும் கார்மேகம். அது மலரல்ல.

வாழ்த்துக்கள்.

enRenRum-anbudan.BALA said...

கண்ணன் சார்,
//'கொண்டல்' என்பது கீழத்திசையில் தோன்றும் கார்மேகம். அது மலரல்ல.
//
திருத்தியமைக்கு நன்றி.

//திவ்யதேசம் பற்றி இன்னொரு தொடரா? தேசிகன் மிக அருமையாக செய்து கொண்டு வருகிறார். அதற்கும் தோது வரும்போது இணைப்புக் கொடுங்கள்.
//
கொடுக்கிறேன்.

தேசிகன் எனது நெருங்கிய நண்பர் தான் :)

//நாலாயிரத்திலும் நான் தேடும் விஷயம் கம்போஜி என்றழைக்கப்பட்ட கம்போடியாவில் நிர்மாணிக்கப்பட்ட அங்கோர்வாட் பற்றிய மங்களாசாசனம் ஏதாவது உண்டா?
//
எனக்குத் தெரிந்து இல்லை. வாசித்து, கேட்டுப் பார்க்கிறேன்.

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails